search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரை திரும்பினர்"

    கடலில் மீன்பிடிக்க சென்றபோது மாயமான தூத்துக்குடி மீனவர்கள் 19 பேரை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட மீனவர்கள் இன்று அதிகாலை கரைக்கு திரும்பி வந்தனர். #Fishermen
    தூத்துக்குடி:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் தூத்துக்குடி பகுதி கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் மற்றும் கடலோர காவல்படை சார்பில் கடந்த 5ந் தேதி அறிவுறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்க சென்ற பெரும்பாலான மீனவர்கள் கரைக்கு திரும்பினர். அதேநேரத்தில் கடந்த 1-ந் தேதி தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்து கடலுக்கு சென்ற ரவி மற்றும் பவுல்ராஜ் என்பவர்களுக்கு சொந்தமான 2 விசைப்படகுகளை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இதனால் அந்த 2 படகுகளில் சென்றிருந்த தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்த மிக்கேல்ராஜ் (வயது 35), ஜெகன் (30), வசந்த் (21), திரேஸ்புரத்தை சேர்ந்த கில்பர்ட் (47), சாயல்குடியை சேர்ந்த ஜோசப் (23), ராமநாதபுரம் மாவட்டம் வெட்டுக்காட்டை சேர்ந்த குழந்தைராஜ் (50), வேம்பாரை சேர்ந்த ராஜ் (30), ராமர் (30), தாளமுத்துநகரை சேர்ந்த வல்லவன் (35), தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த டால்வின், தருவைகுளத்தை சேர்ந்த விஜி (25), சுதாகர் (26), அந்தோணி (47), தாளமுத்துநகரை சேர்ந்த விக்கி (24), அன்சாரி (23), செல்வராஜ் (65), எபிஸ்டன் (22), கோவில்பட்டியை சேர்ந்த ஜோபின் (30), சவேரியார்புரத்தை சேர்ந்த செல்வம் (24) ஆகிய 19 மீனவர்களும் கரை திரும்பவில்லை.

    இதனால் அந்த மீனவர்களின் கதி என்ன? என தெரியாமல் இருந்தது. தொடர்ந்து அவர்கள் கரைக்கு திரும்பி வராததால் அவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்தனர். இதனால் தூத்துக்குடி கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் மாயமான 19 மீனவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

    கடலோர காவல்படையின் ரோந்து கப்பல்கள் மற்றும் டோனியர் வகை சிறிய விமானங்களும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்தநிலையில் அந்த 2 விசைப்படகுகளும் கன்னியாகுமரியில் இருந்து தெற்கு பகுதியில் சுமார் 150 கடல் மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து உடனடியாக மீனவர்கள் இருக்கும் பகுதிக்கு தூத்துக்குடி கடலோர காவல்படையின் அபிராஜ் ரோந்து கப்பல் விரைந்து சென்றது. அங்கு 2 படகுகளில் இருந்த 19 மீனவர்களையும் கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

    மீட்கப்பட்ட 19 மீனவர்களும் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கரைக்கு திரும்பி வந்தனர். தூத்துக்குடி தருவைகுளத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு வந்த அவர்களை குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். #Fishermen



    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்று கரை திரும்பாமல் மாயமான 6 மீனவர்கள் நள்ளிரவு 1 மணிக்கு கரை திரும்பினார்கள். #Fishermen
    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த விஜயகுமார், ஆசைத்தம்பி, மணி, முத்து, சுரேஷ், முருகேசன் ஆகிய 6 மீனவர்கள் பைபர் படகில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் 1-ந்தேதி கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரை திரும்பாமல் மாயமானார்கள்.

    இதையடுத்து கடலோர காவல் படையினர் 2 படகுகளில் கடலுக்கு சென்று மாயமான மீனவர்களை தேடினார்கள். இந்த நிலையில் மாயமான 6 மீனவர்களும் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கரை திரும்பினார்கள். அவர்கள் சென்ற படகு 2 என்ஜின்களை கொண்ட பைபர் படகு ஆகும். அதில் ஒரு என்ஜின் பழுதானது. ஜி.பி.ஆர்.எஸ். கருவியும் வேலை செய்யவில்லை. இதனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு என்ஜின் மூலம் படகை மெதுவாக இயக்கி கரைவந்து சேர்ந்தோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார். #Fishermen


    ×